நிலையில்லா நிரந்தரம்!

பள்ளியின்
கடைசி நாட்கள்
நண்பர்களைப் பிரியும்
சோகம்
ஒன்றாக சேர்வோமா
கல்லூரியில்?
சாத்தியம்
ஆனால்
இங்கு சாத்தியப் படவில்லை!
- o -
தாய் தந்தையைப்
பிரிந்து
முதன் முறை
செல்லும் பள்ளி
தாய் தந்தை
அல்லாத ஒரு புது உலகம்
பால் மணம் மாற
பிள்ளையின் அழு குரலில்
ஒளிந்திருக்கும்
பரிதவிப்பு
- o -
கல்லூரியின்
நான்கு வருடங்கள்
தோழன் அவனே
தமையன் அவனே
வெவ்வேறு ஊரில்
கிடைத்த வேலை
அடிக்கடி சந்திப்போம்
என்று மனம் தேற்றிக் கொள்ளும்
அந்த இயலாமை
- o -
பிள்ளையின் மணம் முடிய
கடமைகள் இனி இல்லை
கொண்ட சந்தோஷம்
முடியும் முன்
வந்தவள் சொல் கேட்டு
வாய்த்தது முதியோர் இல்லம்
உனக்கு நான்
எனக்கு நீ
உண்மை உறவு இனி இதுவே
விட்டு வெளியேறும் போது
கொள்ளும் வேதனை
- o -
என்றுமே
உறவுகளில்
இல்லாத நிரந்தரம்
இது தானோ
எங்குமே
இயற்கையின்
சுதந்திரம்!


<< Home