Monday, August 13, 2007

ஆ காட்டு !

உள்ளங்கையில் காயம்
ஸ்பூனுடன் தடுமாற்றம்

இல்லை
ஊருக்கு சென்ற பின்

"ஆ காட்டு"
ஆசையாக ஊட்டிவிட்டாள் என் தாய்

மறந்து போயிருந்த
குழந்தைப் பருவம்
நினைவில் மீண்டும்

வாய் நிறைய
பெரிய உருண்டைகள்

குழந்தையாக மீண்டும் நான்
என்றுமில்லா பசியுடன்
என்றுமில்லா நிறைவுடன்

இதுபோல் வாய்ப்பு
கிட்டுமா எனக்கு?

அவளுக்கு ஊட்டிவிட‌
கிடைக்குமா தருணம்?

அய்யோ!!
வேண்டாம் அவளுக்கு எந்த காயமும்
அப்படி ஒன்றும்
வேண்டாம் எனக்கும் எந்த தருணமும்

கடவுளிடம் கேட்டுக் கொண்டேன்.

ஊருக்கு சென்றிருந்தேன்
இவ்வாரம்

இடது கையில் மட்டும்
மருதாணியுடன்
என் அம்மா

ஆஹா

கடவுளுக்கு சொன்னேன்
ஒரு குட்டி நன்றி

வலது கையிலும்
இட்டேன் பிடிவாதமாக
அழகிய கோலம்

செய்து வைத்திருந்த‌
சாம்பாரையும் பொரிய‌லையும்
கொண்ட‌ த‌ட்டுட‌ன்
உட்கார்ந்தேன்
அவ‌ள் அருகில்
"அம்மா... ஆ காட்டு"