மழை !

மழை விடாமல் பெய்தது
காத்திருந்தேன்
அலுவலக வாசலில்
குடை ஏதும் இன்றி
என் பசிக்கு அளவேதும் இன்றி
"ஹே...இங்க தான் இருக்கியா?
என்ன வீட்டுக்கு போகலயா? நோ குடையா ?"
இரவு எட்டுக்கும்
இத்தனை உற்சாகமா உன்னிடம்?
கேட்காமலே
எனக்கும் கடன் கொடுத்தாய்
உன் உற்சாகத்தை
உன்னிடம் குடையும் இருந்தால்
அதிலும் கொஞ்சம் கிடைக்குமா இடம்?
"ச்சே! என் கிட்டயும் குடை இல்லை"
கேட்கும் முன் நீயே சொல்லி விட்டாய்
ச்சே!
என்னிடம் மட்டும்
இப்போது ஒரு குடை இருந்திருந்தால்!
மழையில்
ஒரே குடையில்
நாம் இருவரும் நனையாமல்
முழுதும் நனைந்த மனதுடன்!
அப்படி எல்லாம் கவிதை எழுத
வாய்ப்பு கிட்டியிருக்கும்
சீக்கிரம் குடை வாங்க
மனதில் இட்டேன் ஒரு கட்டளை
மழை நிற்பதாக இல்லை
"ஹே...இது ஒரு காதல் கதை சீரியல் பார்க்கணும்
இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு
என்ன பண்ணலாம்?"
உண்மையான கவலையுடன் நீ!
"ஏதாவது செய்யேன்"
என்று சொல்வது போல் இருந்தது.
காலையிலிருந்து
உறங்கியிருந்த மூலையை
தட்டி எழுப்பினேன்.
"உன் பைக்கை இங்கேயே விட்டுவிடு.
இங்க இருந்து எப்படியாவது அந்த ஆட்டோ ஸ்டாண்ட் போய்ட்டா போதும்.
அப்புறம் அங்கிருந்து ஆட்டோவில் போயிடலாம்"
ஆனால்
இங்கிருந்து அங்கு செல்வது
இந்த மழையில்
எப்படி சாத்தியம்?
"அந்த கவலையை என்னிடம் விடு"
உன் துப்பட்டாவிற்கு கொடுத்தாய்
புது வேலை
"இப்படியே இதை பிடிச்சிட்டு போயிடுறேன்"
ஓட ஆயத்தமானாய்.
"உங்களுக்குலாம் இப்படி ஒரு அட்வாண்டேஜ்"
என்றேன்
லிஃப்ட் கிடைக்குமா?
"நீயும் வரியா? அப்படியே போய்டலாம்
ஆனா கொஞ்சம் நனைஞ்சிடுவ...ஓகேவா?"
விளக்கணைத்த பிறகு போர்வையின் அடியில்
சிரித்து விளையாடி
ரகசியம் பேசும்
வாண்டுகள் போல
நாம் இப்போது
மழையில் நனைந்தோம்
மழையை மறந்தோம்
அதற்குள் வந்தே விட்டோமா?
விலகினோம்
ஆட்டோவும் கிடைத்தது
பை சொல்லி விடை பெற்றாய்
நான்
ஆட்டோவை வேண்டாம்
என்று முழுதும் நனைந்தபடி
நடந்தேன் வீட்டை நோக்கி


<< Home