பார்த்த முதல் நாளே!

மணி காலை 8:45
என் பைக்கில் பறந்துக் கொண்டிருந்தேன். 15 நிமிடம் முன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுப்பிய என் பிஎல்-இன் குரல் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது. ஒன்பது மணிக்கு கான்ஃப் கால். யுஎஸ் ஆட்களுடன். அவர்களின் நேரப்படி இரவு எட்டரை.
டென்ஷன் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, வேகத்தையும் கொஞ்சம் குறைத்து, சீராக செல்ல துவங்கினேன்.
நேற்று நைட் ஷோ பார்த்த படத்திலிருந்து ஒரு பாடல் முணுமுணுக்க துவங்கினேன். எதாவது சாப்பிட்டு செல்லலாமா? வேண்டாம். ஒரு நிமிடம் லேட் என்றாலும் அதற்காக என் பிஎல் ஆடும் ருத்ர தாண்டவத்தை பார்க்க இன்று ஏனோ ஆர்வமில்லை.
சரி ஒரு 'குட் டே' வாங்கிட்டு போகலாம் என்று வழியில் இருந்த ஒரு கடை அருகே என் பைக்கை நிறுத்தினேன். வாங்கிக் கொண்டு அப்படியே பக்கத்தில் இருந்த ஒரு டீ கடையில் ஒரு டீ ஆர்டர் செய்தேன். டீ அருந்தியபடி நான் ரோட்டோரம் நிற்க, தடால் என்று ஒரு பெரிய சத்தம்.
என்னவென்று பார்க்கும் முன் அங்கு ஒரு கூட்டமே கூடிவிட்டது. டீ கான காசை கொடுத்துவிட்டு என்னவென்று நானும் பார்க்க சென்றேன். ஒரு ஆட்டோவும் ஒரு ஸ்கூட்டியும் மோதிக்கொண்டிருந்தனர். ஆட்டோவின் முன் பகுதியில் ஒரு ஒடுக்கு. ஆட்டோகாரன் லபோ திபோ வென கூவிக்கொண்டிருந்தான். ஸ்கூட்டியோ தன் கண்ணாடி ஒன்றினை தானம் செய்துவிட்டு ஓய்வாக படுத்துக் கொண்டிருந்தது. அருகில் ஒரு பெண் மிகுந்த படப்படப்புடன் நின்றிருந்தாள்.
பச்சை நிற சுடிதார். சராசரி உயரம். அடக்கமான அழகுடன் உலாவரும் பல நடுத்தர வர்கத்தினரில் ஒருத்தி. கழுத்தில் ஒரு tag-ஐ மாட்டியிருந்தாள். எதோ ஒரு ஐடி கம்பனியில் வேலை என்பது தெரிந்தது. அவள் சொல்வதை யாரும் கேட்பதுபோல் இல்லை. அவளின் நிலைமை பரிதாபமாக இருந்தது.
எதாவது உதவி செய்யலாமா என்று யோசித்து வேண்டாம் விவகாரம் என்று ஒதுங்க நினைக்கையில் அவள் tag-இல் இருந்த அந்த பெயரைப் பார்த்தேன். நான் வேலை செய்யும் அந்த பன்னாட்டு நிறுவனத்தின் பெயர் அதில். அட நம் கூட வேலை பார்க்கும் ஒரு பெண்ணா? உதவலாமே என்று கூட்டத்தினை விலக்கி சென்றேன்.
ஹாய் நீங்க " "-ல தான வேலை செய்றீங்க..என்ன ப்ராப்ளம்? என்ன ஆட்டோகாரன் உங்க வண்டி மேல மோதிட்டு வம்பு பண்ரானா?
ஹிரோயிஸம் கொஞ்சம் தூக்கல் என்று என்னக்கே தோன்றியது.
ஹெலோ யாருப்பா அது இங்க வந்து பேசு. என்ன ஆச்சுனு உனக்கு மொதோ தெரியுமா? என்று ஆட்டோகாரன் ஆரம்பித்தான்.
அப்படியா என்று அந்த பெண்ணை திரும்பி பார்க்க அவளும் ஆமாம் என, ஆட்டோகாரனை தனியாக அழைத்து சென்று, அவன் வண்டிக்கு நேர்ந்த அந்த டேமேஜ்க்கு ஒரு 'பெரிய' ரூபாய் நோட்டை இழைத்துவிட்டு பின்பு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வண்டியினை நிமிர்த்தி ஓரத்தில் நிறுத்தினேன்.
கூட்டம் கலையத் துவங்கியது. பார்க் செய்த அந்த ஸ்கூட்டியை யாரும் அதன் பின் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை.
செல்போனில் தோழியுடன் பேசியபடி சாலையை அவள் கடக்க, எதிரில் வழக்கமான 'மிதமான' வேகத்தில் ஒரு ஆட்டோ. கடைசி நிமிடத்தில் அதை கவனித்து அவள் இப்படி அப்படி என்று குழப்பமாக ஆட, ஆட்டோவும் குழம்பி பின் சுதாரித்து சாலை ஓரத்துக்கு திருப்ப அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஒரு ஸ்கூட்டியினை வீழ்த்தி நின்றது.
டீ கடைக்கு சென்று அவளுக்கு ஒரு டீ ஆர்டர் செய்தேன்.
அவளிடம் என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன். அவள் எங்கள் நிறுவனத்தில் மூன்று மாதங்கள் முன்பு சேர்ந்திருந்தாள். செய்த உதவிக்கு நன்றி கூறினாள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். படபடப்பு கொஞ்சம் குறைந்த பின் நிறையவே பேசினாள்.
நான் அவளை அலுவலகத்தில் ட்ராப் செய்ய வேண்டுமா என கேட்க, மீண்டும் நன்றி. என் பைக்கை ஸ்டார்ட் செய்து அவள் அதில் அமர்ந்தவுடன் ஏனோ என் உதடினில் "பார்த்த முதல் நாளே".
ஐந்து நிமிடங்களில் அலுவலகத்தின் வாசலில். அவளை சட்டென யாரும் கடத்திச் செல்லவில்லை.
மீண்டும் காஃபி ப்ரேக்கில் சந்திப்பதாக முடிவு செய்து கொண்டு இருவரும் விடை பெற்றுக்கொண்டோம்.
எதையோ சாதித்துவிட்ட ஒரு உற்சாகத்தில் நடந்தேன். என் க்யூபை அடைந்தேன். எதிரில் என் பிஎல். சட்டென ஒரு கலவரம் என்னுள். 9:40 என்றது என் டைமெக்ஸ்.
அய்யோ நடந்த கூத்தில் கான்ஃப் காலை மறந்து விட்டேனா?
சிரிப்புடன் அவர். கால்-ஐ அடெண்ட் செய்யாது இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்?
காஃபி குடித்து விட்டு சரியாக பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக சொன்னார். எனக்கு குழப்பமாக இருந்தது. மீண்டும் மணியை சரிபார்த்துக் கொள்ள, என் குழப்பத்தை பார்த்து சிரித்த படி சொன்னார் இன்னைல இருந்து டே லைட் சேவிங் முடியுது. சோ இனி ஆறு மாசத்துக்கு கான்ஃப் கால் ஒன்பது மணிக்கு இல்ல பத்து மணிக்கு தான் ஆரம்பம்.
ஒரு பெரிய நிம்மதி பெருமூச்சு.
கான்ஃப் கால்-காக சரியாக ஒன்பது மணிக்கே வந்திருந்த என் தோழன் சொன்னான்.
இவ்ளோ லேட்டா வந்துட்டு தப்பிச்சிட்ட மச்சி. அதிர்ஷ்ட தேவதை உன் கூட தான்டா இருக்கா!


<< Home