Wednesday, August 30, 2006

சில்ரன் ஆஃப் ஹெவன்


ஆகஸ்ட் மாதம் பதினான்காம் தேதி அலுவலகத்தில் விடுப்பு எடுத்து ஊருக்கு சென்றிருந்தேன்.

பாண்டிச்சேரி...அழகான ஊர். செட்டாப் பாக்ஸ்-இன் தொல்லை இல்லாத ஊர். சென்னையில் காண முடியாத விளையாட்டு மற்றும் ஆங்கில திரைபடங்களின் சேனல்கள்...

மதியம் அம்மாவின் சமையலை ஒரு பிடி பிடித்துவிட்டு பின் மீண்டும் தொலைகாட்சியின் பிடியில் நான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நம் இந்திய அணி வென்ற ஒரு கிரிகெட் போட்டியின் மறு ஒளிபரப்பினை பார்த்துக் கொண்டிருந்தேன்...வேற ஏதாவது சுவாரஸ்யமாக இருக்குமா என்று எண்ணி மீண்டும் ரிமோட்டினை ஓடவிட்டேன்.

வோர்ல்ட் ஸ்பேஸ் விளம்பரத்தில் தலைவர். சட்டென அந்த சேனலில் பார்வையை நிறுத்தினேன். அதில் வரும் இசையினை ரசித்திருந்தேன். "தேரிஸ் சோ மச் டு ஹியர்"

வேறு சேனல் மாற்ற எத்தனிக்கும் முன் "சில்ரன் ஆஃப் ஹெவன்" கண்டினியூஸ் என்றது.

சிறிது நேரம் பார்க்கலாம் என்று எண்ணி அப்படத்தை பார்க்க ஆரம்பித்த நான் பின் அந்த படம் முடிந்து பெயர் போடும் வரை ரிமோட்டைக் கூட தொடவில்லை.

அசந்து விட்டேன்! இந்தளவிற்கு என்னிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம் நான் எப்போது கடைசியாக பார்த்தேன்?

படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்கள் இர‌ண்டு பேர். பத்து மற்றும் பனிரெண்டு வயதே இருக்கும் ஒரு அண்ணன்‍ தங்கை அவர்கள். ஒரு இஸ்லாமிய நாட்டில் நடக்கும் ஒரு கதை இது. அவர்களின் மொழியிலே பேசி இருந்தனர் போலும். அதை தெளிவான ஆங்கிலத்தில் டப்பிங் செய்திருந்தனர். அதனால் எல்லா உரையாடல்களும் தெளிவாக புரிந்தது.

ஒரு மிக எளிமையான ஒரு கதை கருவை வைத்துக் கொண்டு திரையில் ஒரு அழகு ஓவியத்தை தீட்டி உள்ளனர். கதை தொலைந்து போன ஒரு ஜோடி ஷு‍வை சுற்றி தான். தங்கையின் ஷு‍வை அண்ணன் தொலைத்து விட, வீட்டின் ஏழ்மையை உணர்ந்து இருவரும் அதை மறைத்து எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கதை.

படத்தின் பல இடங்களில் உரையாடலே இல்லை. வெறும் காட்சிகளும் பின்ன‌னி இசையும் தான். ஆனால் அவை யாவும் அவ்வளவு அழகு.

படம் பார்த்த பின் நேராக இன்டர்னெட்‍இல் இந்த படத்தை பற்றி தேட துவங்கினேன். அப்போது இப்படத்தைப் பற்றி நான் தெரிந்த கொண்ட சில சுவாரஸ்யமானவை.

* 1997 ஆம் ஆண்டு வெளிவந்த படம்.
* இது ஒரு ஈரான் நாட்டு படம்.
* ஆஸ்கருக்கு ஈரான் நாட்டின் சார்பாக பரிந்துரைக்கப்பட்டது.

சென்ற வார ஆனந்த விகடன் முதல், "உலக சினிமா" என்ற ஒரு பகுதியில், வாரம் ஒரு உலக தரம் வாய்ந்த படத்தினை பற்றி ஒரு கட்டுரை எழுதுகிறார்கள்.

அதில் முதல் வாரம் வெளிவந்த படம்...ஆம் "சில்ரன் ஆஃப் ஹெவன்" தான்!

டிவிடி வாங்கி பார்க்க வேண்டிய படம்!