Thursday, November 23, 2006

முதல் தோழி!

அப்பா
அம்மா
நான்

எங்க‌ள் மூவ‌ருக்குள் ஓர் த‌னி உல‌க‌ம்.
அதில் நானே ராஜா!

என்னுள்
எத்தனை ஆசைகள்
எத்தனை க‌ன‌வுக‌ள்

அத்த‌னையும் நொடி பொழுதில் நிறைவேறின‌,
என் தாய் த‌ந்தையின் அன்பினால்.

இந்நிலை நிலைக்கவில்லை பல நாள்
வந்துவிட்டாள் வீட்டிற்கு புதுவரவாக!

ராஜா நான் இனி அல்லவோ!

ஆம்.

ராஜா சட்டென சேவகன் ஆனேன் புது இளவரசிக்கு.

அட என்ன இது!
இவள் இட்டது தான் சட்டமா இந்நாட்டில்?

புரியவில்லை எனக்கு.

நிலைகொள்ளா கோபம்
நிலைக்கவில்லை பல நாள்!

சிந்தும் சிரிப்பினால்
சீக்கிர‌மே சிறைபிடித்தாள்

சின்ன‌ஞ்சிறு தேவ‌தை
சீக்கிரமே ‍என் சினேகிதி ஆனாள்

ஆம்

இன்று நான் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம்
டிவி ரிமோட்டினை எனக்களித்து
நித்தம் சேனலை மாற்றச் சொல்ப‌வள்

காலையில் உறங்கும் போது
கரிசனத்தோடு மின் விசிறியை நிறுத்தி
கோபம் கொள்ள செய்பவள்

எனக்கும் புரியாத பாடங்களில்
கேள்விகள் எழுப்பி
அப்பாவிடம் திட்டு வாங்கி தருபவள்

அடிக்க‌டி புத்தாடைக்காக
என்னை போதீஸ்‍,ஆர் எம் கே வி யில்
புழுவாக புழுங்க வைப்பவள்

எனக்கு கிடைக்காத நிறுவனத்தில்
சலித்துக் கொள்ளாமல் வேலை வாங்கி
என்னை இன்றளவும் ஏளனம் செய்பவள்

நான் என்ன தான் கோபம் கொண்டாலும்
என்னை சட்டென சிரிக்க வைக்கும்
ஆம் - என் தங்கை

அவளே என் முதல் தோழி!